Tuesday, April 08, 2008

433. ஓகேனக்கல், வக்கீல்கள், சினிமாக்காரர்கள், அரசியல் et al ...

ஒகேனக்கல் பிரச்சினை குறித்து சில எண்ணங்கள்:

1. இப்பிரச்சினைக்கு மூல காரணம் பிஜேபியின் எட்டியூரப்பா தான் என்றாலும், நமது முதல்வர் 'எலும்பு''முறிவு' பற்றி பேசாமல் இருந்திருந்தால், பிரச்சினை இவ்வளவு பெரிதாகியிருக்காது தான்! கர்னாடகத்தில் வாழும் தமிழர்கள் மேல் பாய வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த (கன்னட ரக்ஷண வேதிகே மற்றும் வட்டாள் நாகராஜ் சார்ந்த அமைப்புகளின்) கன்னட வெறியர்களுக்கு (பெங்களூரில் தமிழர்க்கு எதிராக வன்முறையில் இறங்குவதற்கு) முதல்வரின் பேச்சு, காரணத்தை ஏற்படுத்தித் தந்தது.

2. அது போலவே, அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி, திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடிவெடுத்த பிறகு, திடீரென்று '2 மாதம் ஒத்தி வைப்பு' என்று தன்னிச்சையாக தமிழக முதல்வர் முடிவெடுத்தது, எட்டியூரப்பாவின் 'வாக்கு வங்கி' அரசியலுக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல! கன்னட வெறியர்களின் வன்முறை குறித்த ஞானோதயம் அன்னாருக்குத் திடீரென்று தோன்றியது ஆச்சரியமாக உள்ளது :(

3. சட்டத்தைக் கையில் எடுத்து செயல்படுவதிலும், வன்முறையிலும் மிகுந்த ஆர்வம் காட்டும் நமது வழக்கறிஞர்கள், சங்கீதா உணவகங்களில் செய்த கலவரம் மிக்க கண்டனத்துக்குரியது! சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்கள் செய்கிற காரியமா இது ?

4. 'உலகப்பொதுமறை' என்று போற்றப்படும் திருக்குறளை இயற்றிய வள்ளுவனுக்கே பெங்களூரில் சிலை அமைக்க, பல காலமாக கன்னட வெறியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது, நாம் அறிந்தது தானே! கன்னட (வெறி) அமைப்புகள், பெங்களூர் வாழ் தமிழர்களால் கன்னடர்களின் வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்படுவது போல ஒரு (தவறான) சிந்தனையை, சாமானிய கன்னடர்களின் மனதில் சிறிது சிறிதாக விஷம் போல ஏற்றியுள்ளதே, அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம்.

5. அடுத்து, தமிழ்த் திரைப்படத் துறையினரின் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நிச்சயம் தேவையில்லாத ஒன்று. இவர்களுக்குத் தான் தமிழுணர்வு வழிவது போல ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்! அன்று பேசிய சிலரின் (முக்கியமாக சத்தியராஜ்!) பேச்சு, கர்னாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு மேலும் தலைவலி உண்டாக்குமே அன்றி, பிரச்சினையை சுமுகமாக தீர்க்க எவ்வகையிலும் உதவாது. ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஜால்ரா போடுவதில் வல்லவர்களான திரைப்படத் துறையினர், தங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தால் அனைவருக்கும் நலம்!

ரஜினி மேல் சத்யராஜுக்கு இருக்கும் பொறாமையும், காழ்ப்பும், அவரது அன்றைய பேச்சில் அப்பட்டமாகத் தெரிந்தது. "பெரியார்" படத்தில் நடித்து விட்டதாலேயே தனக்கு ஒரு 'சிறப்புத் தகுதி' வந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் சத்யராஜ் கூட்டத்தில் அத்தனை தாறுமாறாகப் பேசியும், அவரது பேச்சை ஒதுக்கித் தள்ளிய கன்னட வெறியர்கள், ரஜினியின் சாதாரணமான பேச்சை திரித்து, அவர் மீது பாயத் தொடங்கி உள்ளனர்! இந்த ஒரு விஷயத்திலேயே, சத்யராஜ் பேச்சுக்கு எந்த அளவு மதிப்பு உள்ளது / முக்கியத்துவம் தரப்படுகிறது என்பது கண்கூடு!

திரைப்படத் துறையினர் இப்படி நடந்து கொண்டதால், 'தமிழ் திரைப்படங்களுக்குத் தடை' என்ற எதிர்மறை விளைவு ஏற்பட்டு, அவர்களுக்குத் தான் நஷ்டம்!

6. "கண்ணுக்குக் கண்" என்பது எந்தப் பயனும் அளிக்காது என்பதை அனைவரும் (விடுதலைச் சிறுத்தைகள் உட்பட) புரிந்து செயல்பட வேண்டும். இங்கு சுகமாக, பத்திரமாக உட்கார்ந்து கொண்டு கர்னாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு பிரச்சினை ஏற்படுவது போல பேசுவதும், செயல்படுவதும் தவறில்லையா ? தற்போது நிலவும் இக்கட்டான சூழலில் பெங்களூர் தமிழ் சங்கமே, கன்னட அமைப்புகளுக்கு ஆதரவான நிலை எடுக்கத் தள்ளப்பட்டிருப்பதை கவனத்தில் கொள்வது அவசியமாகிறது!

7. 1998-இல் கர்னாடகவுடன் ஒகேனக்கல் திட்டத்திற்கான ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே, இத்திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டு மெத்தனப் போக்கை கடைபிடித்ததும் கூட, இப்போது உருவாகியிருக்கும் பிரச்சினைக்கு ஒரு முக்கியக் காரணம்! மேலும், இக்குடிநீர் திட்டத்தை அப்போதே நிறைவேற்றியிருந்தால் குறைந்த செலவே (350-400 கோடியில்) ஆகியிருக்கும். தற்போதைய திட்டச் செலவு மதிப்பீடு 1334 கோடி!!!

8. தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பிஜேபி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையே பிராந்திய ரீதியில் குறுகிய நோக்குடன் செயல்படும்போது, மாநிலக் கட்சிகள் பற்றிப் பேசிப் புண்ணியமில்லை! வட இந்தியர்களுக்கு எதிராக ராஜ் தாக்கரேயின் நவநிர்மாண் சேனா நடத்திய வன்முறை, தற்போதைய சூழலில் நினைவு கூரத் தக்கது. இது போன்ற பிரிவினைவாத அவலங்கள் தொடருமானால், ஏற்கனவே நம்மிடையே விரவி இருக்கும் சாதி/மத/இனப் பிரச்சினைகள் தீவிர நிலையை அடைந்து, சோவியத் யூனியனுக்கு ஏற்பட்ட கதி (உடனடியாக இல்லாவிட்டாலும்!) இந்தியாவுக்கும் ஏற்படும் அபாயம் இருப்பதாகத் தோன்றுகிறது!

Final Word: காவிரிப் பிரச்சினை போல, முல்லைப் பெரியார் போல, ஓகேனக்கல் பிரச்சினைக்கும் வெகு நாட்களுக்கு எவ்வித தீர்வும் ஏற்படப் போவதில்லை என்பது தான் நிதர்சனம். இன்னும் 2-3 மாதங்களில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே, இந்த விஷயத்தில் ஆர்வம் போய் விடும். திரும்பவும் யாராவது கிளப்பி விடும் வரை, மக்களும் சரி, ஊடகங்களும் சரி, இப்பிரச்சினையை மறந்து இருப்பார்கள் !!!

எ.அ.பாலா

9 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test !

said...

நல்லாத் தான் சொல்லி இருக்கீங்க ...

சரவணகுமார் said...

எ அ பாலா அவர்களே

நல்ல பதிவு. பெரும்பாலான கருத்துக்களுடன் ஒத்துப் போகிறேன். குறிப்பாக

''அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி, திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல
முடிவெடுத்த பிறகு, திடீரென்று '2 மாதம் ஒத்தி வைப்பு' என்று தன்னிச்சையாக தமிழக முதல்வர்
முடிவெடுத்தது,"

இதுதான் கேலிக் கூத்தின் மொத்த சாராம்சமே.

நடிகர்கள் உண்ணாவிரதம் இருந்து எதிர்ப்பைக் காட்டியது தவறில்லை.ஏனென்றால் இன்னும் தமிழகத்தில் நடிகர்கள் கருத்து கவனிக்கப் படுகிறது. ஆனால் மேடை போட்டு மைக் கிடைத்தது என்று வாய்க்கு வந்ததைப் பேசி "காமெடி"பண்ணியதுதான் ஓவர். பிரச்சினை என்னவென்றால் கலைஞருக்கு (அதுவும் பதவியில் வேறு இருந்து விட்டால்) ஜால்ரா தட்டும் போது இவர்களுக்கும் லிமிட் தெரிவதில்லை " வலையுலகில் இருக்கும் சிலரைப் போல "

இத்துப்போன ரீல் said...

//Final Word: காவிரிப் பிரச்சினை போல, முல்லைப் பெரியார் போல, ஓகேனக்கல் பிரச்சினைக்கும் வெகு நாட்களுக்கு எவ்வித தீர்வும் ஏற்படப் போவதில்லை என்பது தான் நிதர்சனம். இன்னும் 2-3 மாதங்களில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே, இந்த விஷயத்தில் ஆர்வம் போய் விடும். திரும்பவும் யாராவது கிளப்பி விடும் வரை, மக்களும் சரி, ஊடகங்களும் சரி, இப்பிரச்சினையை மறந்து இருப்பார்கள் !!!//

இப்படிதான் நடக்கும் என்று கருணாநிதியின் அரசியல் பற்றி தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.ஆனால் ஏற்கனவே காவேரி பிரச்சனையில் கருணாநிதி தமிழ்மக்களை
ஏமாற்றியதைப் பற்றி எழுதினால்,கருணாநிதியின் மேல் காழ்புணர்ச்சி,மண்ணாங்கட்டி...என்று
ஆரம்பித்து விடுகிறார்கள்.அல்லது பார்ப்பனர்கள் சதி,RSS சதி.இப்படி!கருணாநிதியை எதிப்பவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள் என்றால் தமிழ்நாட்டில் முக்கால்வாசிப் பார்ப்பனர்களா?
உங்கள் பதிவு உண்மையை உணர்த்தியது!

ச.சங்கர் said...

Dear Balaji

congrats on crossing readeship mark of 100,000.:))

enRenRum-anbudan.BALA said...

வாசித்து கருத்து கூறிய

அனானி, சரவணகுமார், இத்துப்போன ரீல் மற்றும் ச.சங்கர் ஆகிய நண்பர்களுக்கு நன்றி.

எ.அ.பாலா

மு. மயூரன் said...

சில கேள்விகள்

enRenRum-anbudan.BALA said...

நன்றி மயூரன் !

Read your posting, Valid Questions!

said...

நல்ல கருத்துக்கள் ...

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails